ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தருணத்தில் சில ஆசைகள் தோன்றும். ஆசை நிறைவேறினால் அடுத்த கணமே மறந்து போவது இயல்பு. நிறைவேறாத ஆசைகள் மனசின் ஒரு மூளையில் சம்மனம் போட்டு உட்கார்ந்து அடிக்கடி வெளிவரும். சில ஆசைகள் தொடர் ஆசைகளாக இருக்கும். சில ஆசைகள் நீர்த்துப்போய் இனி நிறைவேற வாய்ப்பே இல்லை என்கிற நிலையை எட்டும். அப்படி நிறைவேறாமல் நீர்த்துப்போன சில ஆசைகள்....
1) எனக்கு சுமார் 10 வயதிருக்கும் போது முதல் முதலில் எங்கள் ஊருக்கு பேருந்து வந்தது. எங்கள் கிராமமே மகிழ்ந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. எங்கள் கிராமத்திற்கு பக்கத்து நகரமாகிய கள்ளக்குறிச்சியில் இருந்து பேருந்து புறப்பட்டு எங்கள் ஊர் வழியாக தாவடிப்பட்டு என்கிற கிராமம் வரை செல்லும். மீண்டும் அங்கிருந்து கிளம்பி, எங்கள் ஊர் வழியாகவே கள்ளக்குறிச்சிக்கு செல்லும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பேருந்து எங்கள் ஊருக்குள் வரும். எங்கள் ஊரில் இருந்து தாவடிப்பட்டிற்கு செல்ல ஒரு ரூபாய் பத்து பைசா. திரும்பி வர அதே 1:10. எனக்கு ரெண்டு ரூபா இருபது பைசா தாங்கப்பா..இந்த பஸ் ல போய்ட்டு அதே பஸ் ல திரும்பியும் நம்ம ஊர்ல வந்து இறங்கிக்கிறேன்ன்னு கேட்டேன். கடைசி வரைக்கும் தரவேயில்லை.
2) மெள்ன கீதங்கள் ன்னு ஒரு படம். அதுல "டாடி டாடி" ன்னு ஒரு பாட்டு. அந்த பாட்டு அடிக்கடி ரேடியோவுல போடுவாங்க. குழந்தை குரலில் இருப்பதால் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். சும்மா இருந்த எங்க அப்பாகிட்ட சொன்னேன்... "அப்பா.. நான் பெரியவன் ஆனதும் நம்ம வீட்ல டேப் வாங்கி, இந்த பாட்டை நாம ரெண்டு பேரும் கேட்கலாம்". எங்க அப்பா அதை கண்டிப்பா மறந்துட்டார். எனக்கு இன்றளவும் நினைவில் இருந்தாலும் இன்னும் நிறைவேறவில்லை.
3) நான்காம் வகுப்பு படிக்கும் போது கணேசன் என்னும் என் சக வகுப்புத்தோழன் எனது புவியியல் புத்தகத்தின் கடைசிப்பக்கத்தை கிழித்துவிட்டான். அவனை பழிவாங்கியே தீர வேண்டும் என்கிற வெறி. ஆள் கொஞ்சம் வாட்டசாட்டமா இருப்பான்... அப்போ முடியல... இருந்தாலும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நினைத்தேன். இன்று வரை அவனை பழிவாங்கவே முடியல
4) எங்கள் பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் சிரமப்படுவது ஆங்கிலம் மற்றும் கணிதம். தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு இவை தான் காரணம். எனக்கும் ஆங்கிலம் சிரமம் என்பதால், ஒரு டுடோரியல் ஆரம்பித்து அனைவருக்கும் கணக்கு சொல்லித்தரணும். நிறைய பேரை 100 க்கு நூறு வாங்க வைக்கனும் ன்னு ஆசைப்பட்டேன்... நிறைவேறாம போய்டுச்சி
இன்னும் வளரும்...
No comments:
Post a Comment