Saturday, 13 June 2009

சிந்தனை செய் மனிதமே...

இந்த கட்டுரையும் எப்போதும் போல் என் மனதில் ஓடும் எண்ண அலைகளில் தெரித்து விழுந்த சில சாரல் துளிகளே... கற்பனையோ, கவிநயமோ, பிரமிப்போ இல்லாத இன்னுமொரு கட்டுரை.

மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக நடத்தப்படும் ஒரு இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எல்லோரையும் போல், எனக்கும் இது போன்று சமூக அக்கறைகொண்ட செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற ஆவல் உண்டு.ஆவல் மட்டுமே இருந்ததே ஒழியே செயல்வடிவம் கொடுக்காமல் போனேன். சென்ற மாதம் சில நல்ல நண்பர்களின் வழியே என்னை அவர்களோடு இணைத்துக்கொண்டேன்.

அந்த நிகழ்வை முடித்து வந்ததும் என் மனதில் தோன்றியது....

உண்மையிலேயே நான் மனமுவந்து தான் இந்த செயலில் ஈடுபடுகிறேனா? அடுத்த நாளே எப்போதும் போல் எனது சராசரி வாழ்க்கைக்கு மீண்டும் சென்று விட்டேன். அப்படியென்றால் அந்த ஒரு நாள் நான் நடித்திருக்கிறேனா? இப்படி ஒரு போலி நடிப்பால் என்னை நானே ஏமாற்றி யாரை வெற்றி கொள்ளப்போகிறேன். எனது விசாலப்பார்வை விரிந்து விட்டதாக உணரவில்லை.

மனம் வளர்ச்சி குன்றியவர்களுடன் பேசிய போதும், விளையாடிய போதும் ஒரு வித திருப்தி எனக்குள் வந்தது உண்மை. மனது மகிழ்ந்தது நிஜம். இந்த உணர்வு சரியானதில்லையே. மனம் வருந்தியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு எப்படி என்னால் சந்தோஷப்பட முடிந்தது?

நான் உரையாடிய அந்த குழந்தைகள், அடுத்த நாள் சாப்பிட்டிருப்பார்களா... இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்களோ என்று எனக்கு தோன்றவில்லையே. ஏன் அது? அப்படியெனில் எனது அந்த ஒரு நாள் சேவை புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தானா? அப்படியெனில் எனக்குள் எனக்கும் தெரியாமல் ஒருவித அரசியல்புத்தி மறைந்திருக்கிறதா?

எந்த வினாவிற்குமே என்னிடம் விடையில்லை. "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது போல் மீண்டும் மீண்டும் இது போன்ற காரியங்களில் என்னை தொடர்ந்து ஈடுபடுத்தினால், உண்மையான உணர்வு ஒரு இழைபோல என்னுடனே ஒட்டிக்கொள்ளுமா? முடியலாம்... குறைந்தது 60 சதவீத சிந்தனையையாவது இவற்றின் பால் செலுத்தினால் சாத்தியமாகலாம்... முயற்சிக்கிறேன்.

இது போன்ற காப்பகங்களின் மீது சமூக ஆர்வளர்களின் பார்வை மிகவும் அதிகமாகி இருக்கிறது. பிறந்த நாள், திருமண நாள் போன்ற நிகழ்வுகளோடு அல்லாமல், மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடை கொடுத்து உதவி வருகின்றனர். உண்மையான நோக்கத்தோடு தொடங்கப்பட்டு, சேவை மனப்பான்மையோடு நடத்தப்படும் காப்பகங்களுக்கு நிதிச்சுமை முன் போல் அதிகம் இல்லை. ஆனால் அடுத்து சொன்ன செய்தி தான் ஆச்சர்ய மூட்டியது.

இவர்களின் காப்பகத்தின் பெயரில் நன்கொடை ரசீது அச்சடித்து ஒரு கூட்டம் பொது மக்களிடம் நன்கொடை வசூல் வேட்டை செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்களாம்.

காப்பகங்களுக்கு உணவு தேவையென்றால் பெரும்பாலான திருமண மண்டபங்களில் இருந்தும், உணவகங்களில் இருந்தும் வந்து குவியுமாம். ஆனால் காலையில் தயாரித்த உணவில் மீதமிருப்பது வந்து சேர மதியம் ஆகுமாம். அதனை இவர்களுக்கு ஊட்டும் போது ஏற்படும் இன்னல்களையும் எடுத்து சொன்னார். அப்போது முடிவெடுத்தேன். இனி ஒரு போதும் மீதமுள்ள உணவை பிறருக்கு தருவதில்லை. பெரும்பாலும் வீட்டில் வேலை செய்பவருக்கு தான் தருவோம்) சமைத்தவுடன் கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு, மீதியை நாம் உண்பது. இத்தனை வருடங்களாக சமைத்து பழகிப்போன நம் குடும்பத்திற்கு எவ்வளவு தேவை என்பது தெரிந்திருக்க வேண்டும். எனவே முதலியேயே எடுத்து வைத்து, சுவை மாறாமல் அவர்களுக்கு தருவது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.

மனவளர்ச்சி குன்றியவர்களை பராமரிப்பது அவ்வளவு எளிதான காரணமாக தெரியவில்லை. காரணம் அவர்களுக்கு பசியும் தெரியாது. எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பதும் தெரியாது... ஏன் சிலருக்கு சாப்பிடவே தெரியாது. அவர்களின் தேவை உணர்ந்து உணவளிப்பது சாதாரண காரியம் இல்லை. அங்கிருந்தவர்களுக்கு ஐஸ்கிரீம் கொடுத்தோம். கொடுப்பதற்கு முன்னர் மூன்று பேரை தனியாக அழைத்து சென்று விட்டனர். காரணம் அவர்களுக்கு ஐஸ்கிரீம் ஒத்துக்கொள்ளாதாம். வலிப்பு வருமாம். இது போன்ற சின்ன சின்ன உபசரிப்புகள் ஒவ்வொருவரும் அனைத்து இடங்களிலும் பின்பற்ற முயற்சித்தான் வாழ்க்கை எவ்வளவு அழகாகும் [:)]

உடல் நிலை சரியில்லாதவர்களில் சிலரை அரசு மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லும் போது, அவர்கள் குணமடைந்ததும் காப்பகத்திற்கு உடனே அனுப்ப மருத்துவர்கள் மறுக்கின்றனராம். இவர்கள் அநாதைகள் தானே... மருத்துவ மாணவர்களுக்கு உபயோகப்படுவார்கள் என அங்கேயே வைத்துக்கொள்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு தேவையான பராமரிப்பு அவ்வளவாக சரியில்லையாம். எங்கே தவறு இருக்கிறது என்பது எனது எல்லைக்கு அப்பாற்பட்டது. நான் உணர வேண்டியது... எல்லோரையும் அரவணை, மரியாதையுடன் நடத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.

இதனை இங்கே பதிவது முறையா என்று தெரியவில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும். காப்பகத்தில் இருக்கும் சிலர் பருவமடைந்த பெண்கள் (பார்ப்பதற்கு சிறுமிகள் போல் தான் தோற்றம் அளித்தனர்...உருவத்தில், செயலில் என அனைத்திலும்). அவர்களுக்கு மாதவிடாய் வருவது கூட தெரியாதாம். அது போன்ற தருணங்களில் சுத்தம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து அதனை மாற்றுவதில் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்கின்றனர். இப்படி பணிசெய்யும் இவர்கள் எங்கே? கடைகளில் நாப்கின் பார்த்தேலே முகம் சுளிக்கும் நான் எங்கே? மனது குறுகிப்போனது. சகிப்புத்தன்மையை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்பது புரிந்தது.

இந்த நிகழ்வில் நான் உணர்ந்து கொண்டது....

உதவி என்பது முடியாதவர்களுக்கு மட்டுமே செய்வதில்லை
முடிந்ததெல்லாம் செய்வது தான்.

சில புகைப்படங்கள் - உங்கள் பார்வைக்கு

http://picasaweb.google.co.in/ritetosuresh/Samarpana?feat=directlink

Monday, 8 June 2009

மனிதம் - கற்று கொண்டது



ஆன்மீகத்தால் இணைந்த சில உள்ளங்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் பஜனையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவின் நோக்கம் ஆன்மீக குருவின் புகழ் குறித்ததோ அல்லது அதன் மகிமை குறித்ததோ இல்லை. அதனை ஏற்பாடு செய்தவர்களிடம் என்னைக்கவர்ந்த சிலவும், நான் பின்பற்ற நினைக்கும் சிலவற்றையுமே இங்கே பதிவு செய்கிறேன்.

இந்தியாவில் இருக்கும் ஒரு ஆன்மீகப்பெரியவரின் ஈர்ப்பால், இங்கிலாந்தில் இருக்கும் அவரின் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஒன்று சேர்ந்து பஜனை, சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, தியானம் முதலானவைகளை நடத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளரின் வீட்டில் ஒரு அறையை இதற்காகவே உபயோகப்படுத்துகிறார்கள்.

அந்த அறையில் அனைத்து மதத்துக்கடவுளும் இருந்தது. இவர்கள் இங்கே முன்னிறுத்துவது மன அமைதி. மதமோ, இனமோ தேசமோ இல்லை.நடுவில் இந்து கடவுள்... விளக்கிற்கு பதிலாக மெழுகு. அதனை தாங்கி நிற்பது மேரி மாதா. வலப்புறம் புத்தர் சிலை. இடப்புறம் அரபி எழுத்தில் ஒரு புகைப்படம். இந்த பரந்த மனப்பான்மை எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? குறைந்த பட்சம் வேற்று மதத்தை வெறுக்கும் மனோபவம் இல்லாமல் இருந்தாலே போதுமே.

ஊதுபத்தி ஏற்றுவதற்கு முன் "Anyone Allegetic to Incense" ன்னு கேட்டப்போ மனிதத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தால் கவரப்பட்டேன். இன்னைக்கும் நம்ம ஊர்ல யாகம் வளர்க்கும் போது கடைசியில வருமே ஒரு பெரும்புகை.. அப்போதெல்லாம் நாம் இப்படி ஒரு முறையாவது யோசித்திருப்போமா?

அங்கே வந்திருந்தவரில் ஒருவர் ஒரு அறக்கட்டளை நிறுவி பல நல்ல காரியங்களை செய்து வருகிறாராம். அறக்கட்டளையின் பெயர் "Wherevertheneed" (http://www.wherevertheneed.org.uk). இது பத்தி சொல்லும் போது "Big name for a small charity" ன்னு சிரிச்சிகிட்டே சொன்னார். இப்படி யாராச்சும் சொன்னா உடனே நாமும் பங்கெடுத்துக்கணும்ன்னு ஒரு ஆர்வம் வரும். நானும் உங்களோட சேர்ந்து பங்கெடுக்க விரும்புகிறேன்னு சொன்னேன். (இது வரைக்கும் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இப்படி கேட்டிருக்கேன். ஆனா எதுவுமே செஞ்சதில்லை). அதுக்கு அவர் சொன்ன பதில் நான் உங்க ஊருக்கு தான் பண்றேன். அப்படி உண்மையாகவே உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் இருந்தா உதவி தேவைப்படும் இடத்தை மட்டும் எங்களுக்கு சொல்லுங்க ன்னு சொன்னார்.

"இந்தியா உங்களுக்கு பிடிச்சிருக்கா" ன்னு கேட்டதுக்கு , சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு கூட எந்த உதவியா இருந்தாலும் இந்தியாவில் கிடைக்கும்...இங்கே கிடைக்காதுன்னு சொன்னார். இதுல எவ்வளவு அர்த்தம் உள்ளடங்கி இருக்கு பார்த்தீங்களா?

தெரிஞ்சவங்களையே வீட்டுக்குள்ள விடாத பழக்கம் தான் நம்முடையது. யாருன்னே தெரியாத என்னை மாதிரி சுமார் 30க்கும் மேற்பட்டவர்களை அவரின் வீட்டில் முழு சுதந்திரமாக அனுமதித்த பாங்கு... அரவணைத்த விதம்...அடடா... இன்னும் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது என்று தோன்றியது...

ரூபாயில் சம்பாதிக்கும் நாம், டாலரில் செலவு செய்து itunes ல download பண்ணி நம்மை நாகரீகமானவனாக காட்டிக்கொள்கிறோம். இவர்கள் "கணேச சரணம்... சரணம் கணேசா" அழகாக பாடி நம்மை ஆட்கொண்டுவிட்டனர்.

கொஞ்சம் தீர்க்கமாக யோசித்துப்பார்க்கிறேன்... இவர்களிடம் என்னை ஈர்த்த அனைத்து குணங்களும் இவர்கள் நம்மிடம் இருந்து கற்று கொண்டது. இந்த பழக்க வழக்கம் எனக்கு அன்னியமாகிப்போனது இன்னும் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

மேலும் சில புகைப்படங்கள்...உங்கள் பார்வைக்கு

Friday, 29 May 2009

பிரிவு

இந்த தலைப்பில் கவிதை எழுதாத கவிஞன் இருப்பது மிகவும் சிரமம். இந்த தலைப்பில் இருக்கும் கவிதைகளை ரசிக்காத ரசிகனும் கஷ்டம். எத்தனை கவிதைகள் படித்திருந்தாலும் எனக்கு இந்த தலைப்பில் பிடித்த கவிதை இது தான். வைரமுத்து எழுதியது.

செத்துக்கிடந்தேன் செல்வமே
என் சிதை விறகெடுத்து
உன் சித்திர விரல்கள்
விதவிதமாய் வீணைகள் செய்தன

உன்னிசை கேட்டு
உயிர்க்கொண்டெழுந்ததும்
பிரிவு ராகமா பேசுகிறாய் நீ!!!


சிறுக சிறுக என்னை சேர்த்து வைத்திருந்தேன் . உன் சில நொடி சின்னப் பார்வையால் சிதறிப்போனதே என் வாழ்க்கை. அஸ்தமனமாகி சிதையில் தீ தாங்க தயாராக இருந்த என்னை அப்படி விட்டுவிட்டிருக்க வேண்டியது தானே. எதற்காக உன் அன்பை காட்டி என்னை மீண்டும் எழுப்பி விட்டு, எழுந்து வந்ததும் துரத்தி அடிக்கிறாய்.

Tuesday, 26 May 2009

Dating

ஒவ்வொருத்தரும் Dating பத்தி நிறைய யோசிப்பாங்க. எல்லா சமயத்திலயும் இந்த Dating ஒரே மாதிரி இருக்காது. இடத்துக்கு இடம், சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறும். நிறைய வாட்டி நம்மல confuse வேற பண்ணும். இப்படி பண்றது சரியா, தப்பான்னு நிறைய சந்தேகம் எல்லாம் வரும். இதைப்பத்தி யார்கிட்ட கேட்கறதுன்னு தெரியாது. நிறைய தடவை நான் ரொம்பவே குழம்பி போய் இருக்கேன்.

கண்டிப்பா இதே மாதிரி குழப்பம் உங்களுக்கும் இருக்கலாம்... இனிமே குழப்பமே வரக்கூடாதுன்னு தான் இங்கே தெளிவா ஒரு பட்டியல். மேட்டர் எல்லாம் சுட்டது தான். ஆனா உபயோகமானது

Internationally recommended format : Day Month Year - உதாரணத்துக்கு 11 February 2009 ன்னு எழுதனும். USA ல இருந்தா மட்டும் விதி விலக்கு. அங்க இப்படித்தான் எழுதனும் - February 11, 2009 ( வருஷத்துக்கு முன்னாடி ஒரு , ) முடிஞ்ச வரைக்கும் dd/mm/yyyy format-ஐ avoid பண்ணுங்க.

சாதாரணமா உபயோகப்படுத்தும் போது single digit date -க்கு முன்னாடி 0 (zero) போட வேண்டியதில்லை. ஆனா predefined format ஆ இருந்தா அவசியம் மறக்காம 0 போடுங்க (ஓ போடுங்க இல்ல சார்.... zero போடுங்க)

சட்டப்பூர்வமான பத்திரங்களுக்கு The 11th day of February 2009 ன்னு போடணுமாம்.

Duration mention பண்ணும் போது - (Hyphen) use பண்ணுங்க. உதாரணத்துக்கு 2009-10 மாதிரி. இதுவே century மாறினா இரண்டையுமே 4 digit ல mention பண்ணுங்க. உதாரணத்துக்கு 1998-2000

Dialogue, Conversation ல use பண்ணும் போது spell பண்ணுங்க. (உ-ம்) Eleventh of February

ஒரு வாக்கியம் வருஷத்துல ஆரம்பிச்சா அதையும் spell பண்ணுங்க. (உ-ம்) Two thousand and three is the most memorable year for me

Sunday, 24 May 2009

நிறைவேறாத ஆசைகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தருணத்தில் சில ஆசைகள் தோன்றும். ஆசை நிறைவேறினால் அடுத்த கணமே மறந்து போவது இயல்பு. நிறைவேறாத ஆசைகள் மனசின் ஒரு மூளையில் சம்மனம் போட்டு உட்கார்ந்து அடிக்கடி வெளிவரும். சில ஆசைகள் தொடர் ஆசைகளாக இருக்கும். சில ஆசைகள் நீர்த்துப்போய் இனி நிறைவேற வாய்ப்பே இல்லை என்கிற நிலையை எட்டும். அப்படி நிறைவேறாமல் நீர்த்துப்போன சில ஆசைகள்....

1) எனக்கு சுமார் 10 வயதிருக்கும் போது முதல் முதலில் எங்கள் ஊருக்கு பேருந்து வந்தது. எங்கள் கிராமமே மகிழ்ந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. எங்கள் கிராமத்திற்கு பக்கத்து நகரமாகிய கள்ளக்குறிச்சியில் இருந்து பேருந்து புறப்பட்டு எங்கள் ஊர் வழியாக தாவடிப்பட்டு என்கிற கிராமம் வரை செல்லும். மீண்டும் அங்கிருந்து கிளம்பி, எங்கள் ஊர் வழியாகவே கள்ளக்குறிச்சிக்கு செல்லும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பேருந்து எங்கள் ஊருக்குள் வரும். எங்கள் ஊரில் இருந்து தாவடிப்பட்டிற்கு செல்ல ஒரு ரூபாய் பத்து பைசா. திரும்பி வர அதே 1:10. எனக்கு ரெண்டு ரூபா இருபது பைசா தாங்கப்பா..இந்த பஸ் ல போய்ட்டு அதே பஸ் ல திரும்பியும் நம்ம ஊர்ல வந்து இறங்கிக்கிறேன்ன்னு கேட்டேன். கடைசி வரைக்கும் தரவேயில்லை.

2) மெள்ன கீதங்கள் ன்னு ஒரு படம். அதுல "டாடி டாடி" ன்னு ஒரு பாட்டு. அந்த பாட்டு அடிக்கடி ரேடியோவுல போடுவாங்க. குழந்தை குரலில் இருப்பதால் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். சும்மா இருந்த எங்க அப்பாகிட்ட சொன்னேன்... "அப்பா.. நான் பெரியவன் ஆனதும் நம்ம வீட்ல டேப் வாங்கி, இந்த பாட்டை நாம ரெண்டு பேரும் கேட்கலாம்". எங்க அப்பா அதை கண்டிப்பா மறந்துட்டார். எனக்கு இன்றளவும் நினைவில் இருந்தாலும் இன்னும் நிறைவேறவில்லை.

3) நான்காம் வகுப்பு படிக்கும் போது கணேசன் என்னும் என் சக வகுப்புத்தோழன் எனது புவியியல் புத்தகத்தின் கடைசிப்பக்கத்தை கிழித்துவிட்டான். அவனை பழிவாங்கியே தீர வேண்டும் என்கிற வெறி. ஆள் கொஞ்சம் வாட்டசாட்டமா இருப்பான்... அப்போ முடியல... இருந்தாலும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நினைத்தேன். இன்று வரை அவனை பழிவாங்கவே முடியல

4) எங்கள் பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் சிரமப்படுவது ஆங்கிலம் மற்றும் கணிதம். தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு இவை தான் காரணம். எனக்கும் ஆங்கிலம் சிரமம் என்பதால், ஒரு டுடோரியல் ஆரம்பித்து அனைவருக்கும் கணக்கு சொல்லித்தரணும். நிறைய பேரை 100 க்கு நூறு வாங்க வைக்கனும் ன்னு ஆசைப்பட்டேன்... நிறைவேறாம போய்டுச்சி

இன்னும் வளரும்...

வரவு செலவு கணக்கு

குடிசையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் இருந்தாலும் சரி. சகல வசதியோடு செளகர்யமாக இருந்தாலும் சரி. சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி. வெறும் செலவு மட்டுமே செய்பவராக இருந்தாலும் சரி. ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று வரவு செலவு கணக்கு

நான் இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள எதுக்கு இந்த கணக்கு? ஆனா செலவு செய்றோமே. எவ்வளவு செய்றோம்ன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?

நான் சம்பாதிக்கிற இத்தனூண்டு சம்பளத்துக்கு இது ரொம்ப அவசியம்? ஒவ்வொரு காசும் நம்ம உழைப்பில் வர்றது... அதை எப்படி செலவு செய்றோம்ன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?

இங்கே நான் உங்களோடு பகிந்து கொள்ள இருப்பது எனது சொந்த அனுபவங்களே... நான் பொருளாதாரப்புலியில்லை. திட்டமிடுவதில் வல்லவனும் இல்லை. எனக்கு நானே கற்றுக்கொண்ட வழிமுறையை தான் உங்களுக்கு சொல்லப்போறேன். அதோட கடைசியா சில டிப்ஸ் -ம் சேர்த்தே...

செலவினங்களை எப்படி கணக்கிடுவது?

பொதுவாக நமக்கு ஆகும் செலவுகளை நான்கு வகையாக பிரிச்சிக்கனும்.

1) மாதச்செலவு
2) காலாண்டு செலவு (மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்யும் செலவு)
3) அரையாண்டு செலவு (ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்யும் செலவு)
4) ஆண்டு செலவு

இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்

1) மாதச்செலவு

ஒவ்வொரு மாதமும் நாம் செய்யும் செலவுகள் அனைத்தையும் இதில் பட்டியல் இடுங்கள். உதாரணமாக கீழ்கண்டவைகள் மாதச்செலவில் அடங்கும்

வீட்டுவாடகை
Maintenance Charges
மளிகை
மின் கட்டணம் ( இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாக இருந்தால் 1/2)
மொபைல்
டெலிபோன்
Internet
Gym and other membership
பால்
கேஸ்
அன்றாட செலவு
பயணச்செலவு ( சொந்த வண்டி இருந்தா Maintenance costம் சேர்த்துக்கோங்க)
கல்வி செலவு
மாதாந்திர சேமிப்பு ( குறுகிய காலம்)
மருத்துவ செலவு ( Insurance இருந்தா அதை மனசுல வச்சிக்கோங்க)
EMI - எதாவது லோன் எடுத்து இருந்தீங்கன்னா.....
Entertainment - அவசியம் கொஞ்சம் கூடுதலாகவே இதற்கு ஒதுக்குங்கள். இதில் மிச்சம் செய்வது உங்கள் சேமிப்பின் சாமர்த்தியம். திடீர் விருந்துகளுக்கான செலவையும் இதுவே பார்த்துக்கொள்ளும்

2) காலாண்டு செலவு

1) Insurance Premium எதாவது இருந்தா இதுல சேர்த்துக்கோங்க.
2) வெளியூர் பயணத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குங்க. முடிந்த வரையில் இதனை மாத செலவில் சேர்ப்பதை தவிர்க்கவும்
3) பிள்ளைகளுக்கான Term fees இருந்தா இதுல சேர்த்துடுங்க


3) அரையாண்டு செலவு

வீட்டு வரி
தண்ணீர் வரி
Dresses - இதனை முடிந்த வரையில் அரையாண்டு செலவில் சேர்த்துக்கொள்ளுங்கள்... இல்ல இல்ல.. ஒவ்வொரு மாசமும் நான் புதுசு புதுசா வாங்குவேன் ந்னு சொன்னா மாச செலவுல தான் சேர்க்கனும்


4) ஆண்டு செலவு

1) AMC Charges
2) Insurance Premium (if any)
3) House keeping
4) Trip expenses

உங்க வாழ்க்கை முறைக்கு ஏற்ப இந்த நான்கு பிரிவுக்கான செலவையும் சரியாக திட்டமிடுங்கள் ...

இனி... ஒரு மாதத்திற்கான தங்களின் மொத்த செலவை கணக்கிடுங்கள்

விளக்கத்திற்காக உதாரணத்துடன்

(i) மாதச்செலவு : 17000.00
(ii) காலாண்டு செலவு : 7500.00
(iii) அரையாண்டு செலவு : 9000.00
(iv) ஆண்டு செலவு : 6000.00


மொத்த மாத செலவு = (i) + (ii)/3 + (iii)/6 + (iv)/12
= 17000 + (7500/3) + (9000/6) + (6000/12)
= 17000 + 2500 + 1500 + 500
= 21500 ரூபாய்

அடுத்து தங்களின் மொத்த வருமானத்தை கணக்கிடுங்கள். தங்களின் மாத வருமானம் செலவை விட குறைவாக இருந்தால் உடனடியாக அதனை குறைப்பதற்கான வழியை கண்டுபிடியுங்கள். கொஞ்சம் தானே துண்டு விழுது. அடுத்த மாசம் கொஞ்சம் பணம் வரும்...சமாளிச்சக்கலாம் ன்னு தயவு செய்து நினைக்காதீங்க. இப்படி எதிர்பாரமல் வரும் வருமானம் சேமிப்பில் தான் சேரனும். அந்த வருமானத்தை வைத்து முன் கூட்டியே செலவு செய்வது பெருந்தவறு.

மாத வருமானம், மாதச்செலவைவிட அதிகமாக இருந்தால்...மீதம் இருக்கும் தொகைக்கு தாங்கள் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த திட்டமிடுதல் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்... இலக்கை பொறுத்தும், குடும்ப மற்றும் சில சூழல்கள் குறித்தும் இந்த திட்டமிடல் வேறுபடும். நான் எவ்வாறு திட்டமிட்டேன் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். This formula works well for me. I am assuming this will work well for others.

சென்னை...

சென்னையில் ஒரு சாலை

ஏதோ சில காரணங்களால் ஒவ்வொருவருக்கும் சில இடங்கள், பகுதிகள், சாலைகள் மிகவும் பிடித்துப்போகும். அப்படி எனக்கு பிடித்த ஒரு சாலையை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். எனக்குப்பிடித்த முதல் இடம் உங்களுக்கு சொன்னாலும் தெரியாது என்பதால் இதோ... உங்களுக்கு தெரிந்த இடம்...

சென்னை அண்ணாநகர் ரவுண்டாணா முதல் திருமங்கலம் சிக்னல் வரை இருக்கும் நேர் சாலை சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடம். எந்த விதத்திலும் (முதல் காதல்... முதல் பணி... சில நினைவு சம்பவங்கள் மாதிரியானவை ) இது எனக்கு அடையாளமாக இருந்ததில்லை.... இருந்தாலும் இந்த சாலை எனக்கு மிகவும் பிடிக்கும்.

Two wheeler இல் சென்றால் LIC Building -இல் வண்டியை நிறுத்தி விட்டு அப்படியே திருமங்கலம் சிக்னல் நோக்கி நடப்பேன். ஒவ்வொரு கடையாய் கண் கொட்ட பார்த்துக்கொண்டு மிகவும் மெதுவாக கடந்து செல்வேன்... திருமங்கலம் சிக்னலில் ரோடு கிராஸ் பண்ணி அடுத்தப்பக்கம் போய் அங்கிருந்து ரவுண்டானாவுக்கு அதே அன்ன நடை. இப்படி நடக்கும் போது வேறெந்த சிந்தனையும் தோன்றாது. வண்டிய எடுத்துகிட்டு சாந்தி காலனி வழியா ஒரு ரவுண்டு... அப்படியே எஸ்.எஸ் சூப்பர் மார்க்கெட் வரைக்கும் போய் மறுபடியும் திருமங்கலம் சிக்னல் வந்து வீடு வந்து சேருவேன்.

சென்ற முறை சென்னை வந்திருந்த போது, எனது இனிய பயணத்தை முதல் நாளே தொடங்கி விட்டேன். அப்போது தோழி ஒருத்தியிடம் இருந்து போன். இருக்கும் இடம் சொன்னேன். "அப்படி என்ன தாங்க அந்த ரோட்ல இருக்கு?" ன்னு ஒருவித சிரிப்பு. என்னை நினைக்கும் போது அந்த சாலை நினைவுக்கு வராமல் போகலாம். ஆனால் சிலருக்கு அந்த ரோடு கிராஸ் செய்யும் போது எனது நினைவு கண்டிப்பாக வருவதாய் சொல்லியிருக்காங்க.

யாருடைய நினைவும் வராது. ஒரு வித இனம் புரியாத சந்தோஷத்துல மனசு நிறையும். சரி அந்த சாலையில் அப்படி என்ன விசேஷம் ன்னு கேக்குரீங்களா? சொல்றேன். ஆனா இதெல்லாம் எனக்கு பிடித்ததற்கான காரணம்ன்னு எடுத்துக்காதீங்க

உங்களுக்கு தேவையானது எதுவாக இருந்தாலும் அது சம்மந்தமான அத்தனை சாய்ஸ் -ம் அங்கே இருக்கும்

1)ஸ்வீட் ந்னு எடுத்துகிட்டீங்கன்னா ... கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன் ல இருந்து பாரம்பரியம் மிக்க கிராண்ட்ஸ் வரைக்கும் இருக்கும்.

2) பேங்க்... கிட்டதட்ட முன்னணி வங்கிகளின் அனைத்து கிளைகளும் இருக்கும்

3) Pizza ன்னு பார்த்தீங்கன்னா Dominos,pizza hut ல இருந்து Marry Brown வரைக்கும் இருக்கும்

4) Retail shop பார்த்தீங்கன்னா vitan (இப்பவும் இருக்கா??) ல இருந்து, நீல்கிரீஸ் வரைக்கும் அத்தனையும் இருக்கும்

5) Hospitals ன்னு பார்த்தீங்க கிட்டதட்ட எல்லா specialized hospitals ம் இருக்கும் (இதுக்கும் லிஸ்ட் வேணுமா என்ன?)

6) கோயில் பார்த்தீங்கன்னா ஐயப்பன் கோயில் முதல் அம்மன் கோயில் வரைக்கும் இருக்கும். சர்ச், மசூதியும் உண்டு

7) மொபைல் வாங்கனும்ன்னா univercel முதல் wavetel வரைக்கும் இருக்கும்

8) சாப்பிடனும்ன்னா சரவண பவன், வசந்த பவன், சங்கீதா ல இருந்து அஞ்சப்பார், அரசப்பர் செட்டிநாடு வரைக்கும் இருக்கும்

9) பொன்னுங்க சமாச்சாரங்க அத்தனைக்கும் இங்கே யோசிக்காம வரலாம்

10) நல்லி சில்க்ஸ் ல இருந்து Hi Style வரைக்கும் இருக்கு

இதுக்கு மேல லிஸ்ட் போட்டா நல்லா இருக்காது. இப்படி உங்களுக்குன்னு பிடிச்ச இடத்தை முடிஞ்சவரைக்கும் நடந்து போய் அனுபவிங்க. அவசியம் இப்படி ஒரு இடம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும். இல்லைன்னா தேடியாவது கண்டு பிடிங்க.

அதுக்காக தயவு செய்து... இங்க தான் இவனை முதல்முதல்ல பார்த்தேன். அங்க தான் நிறைய நேரம் spent பண்ணி இருக்கேன் ...மாதிரி காரணங்கள் எல்லாம் வச்சிக்காதீங்க. ஏன்னா இது மாதிரி சம்பவங்கள் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும். இதுல புதுசா சொல்றதுக்கு என்ன இருக்கு?

அன்பு

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது தான் அன்பு. எந்த சூழ்நிலையிலும் மாறாதது தான் அன்பு. அளவிட எந்த ஒரு அளவுகோலும் இல்லாதது தான் அன்பு. பகிர்வதால் குறையாதது அன்பு.

மனிதர்களோடு நின்றுவிடாமல், நாடு, மொழி,இனம், தாவரம், விளங்கு, இருக்கிறதா இல்லையா என்று தெரியாத கடவுள் வரை எல்லையில்லாமல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த அன்புக்குத்தான் எத்தனை விளக்கங்கள்...வரையறைகள்...

எதிர்பார்ப்பு இல்லாதது எப்படி அன்பாக முடியும்? ஏடுகளிலும், இலக்கியங்களிலும் இது போன்ற அன்புகளுக்கு நீங்கா இடம் இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் முடியுமா? சாத்தியமா? சரி.. இங்கே எதிர்பார்ப்பு என்பது என்ன?

இன்னைக்கு இவன் கூட போனா ஒரு டீ வாங்கித்தருவான் என்பதற்காக "மச்சி" பாஷையோடு உடன் உலா வருவதா?

இவனுக்கு நெட்வொர்க் அதிகம்...ஒரு வழியில் இல்லனாலும் இன்னொரு வழியில் உபயோகப்படுவான் என்று தொடர் நட்பில் இருப்பதா?

ஹாய் சொன்னா, ஹலோ சொல்லுவான் என்கிற நம்பிக்கையில் சொல்வதா?

விளங்கவில்லை. ஆனால் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு...உண்ணுவார் இல்லாமல் சமைக்கும் உணவைப்போன்றது. சீக்கிரம் கெட்டுப்போவதோடு மட்டும் இல்லாமல் எதற்கும் உபயோகமில்லாமல் போகும்.

எதிர்பார்ப்புகள் இருக்கனும். அது தான் அன்பு.சில எதிர்பார்ப்புகள் நம் இருக்கும் போது வெளிப்படுவதில்லை. இல்லாதிருக்கும் போது எங்கே இவன் என்கிற தேடல் . அந்த தேடலின் விளைவு அன்பின் வெளிப்பாடு. இதோ சற்றே விளக்கமாய்.....

இரண்டு வாரமாக என்னால் அலுவலகம் செல்ல முடியாத சூழல். திடீரென இன்று ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு (எனது தொலைபேசி எண் அவருக்கு தெரியாது. எங்களின் நெருக்கம் அலுவலகத்தில் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்)

என்ன சுரேஷ் ... இங்க தான் இருக்கீங்களா...
ரொம்ப நாளா ஆபிஸ் பக்கம் ஆளையே காணோம்.
ரெண்டொரு வாட்டி நீங்க இருக்க சீட் பக்கமா கிராஸ் பண்ணி போனேன்...
நீங்க இல்லை..
சரி எங்கயாச்சும் மீட்டிங் போய் இருப்பீங்கன்னு நினைச்சேன்.

நாளாக நாளாக அழுத்தம் ஜாஸ்தி ஆகி, ஒரு வழியா உங்க நெம்பர் கண்டு பிடிச்சேன். எப்படி இருக்கீங்க? இப்படி விடாமல் பேசினார்.

எனக்கு ஆச்சர்யம் ஒரு பக்கம். அதைவிட அளவிட முடியாத மகிழ்ச்சி இன்னொரு பக்கம். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு விசாரிப்பு.அந்த விசாரிப்பில் ஒரு அக்கறை. அந்த அக்கறையில் எனக்கு அவர் மீது ஒரு வித ஈர்ப்பு. இந்த அங்கீகாரம் அன்பிற்கு முதற்படி. இது மிக மிக அவசியம்.

ஹலோ கமல். கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஜி.பி கொஞ்சம் ரெஸ்ட் ல இருக்க சொல்லி இருகாங்க. செவ்வாய்க்கிழமை மறுபடியும் வரச்சொல்லி இருக்காங்க. மத்தப்படி ஒன்னும் இல்லைங்க. வீட்ல தான் இருக்கேன். வீட்டுக்கு வர்றதுன்னா வாங்களேன். ஒரு சராசரியான பதில்.

செவ்வாய்க்கிழமை காலையில் மீண்டும் கமலிடம் இருந்து போன். சுரேஷ் ...எதாச்சும் உதவி வேணுங்களா? நான் வேணும்ன்னா உங்க கூட ஹாஸ்பிட்டலுக்கு வரட்டுங்களா? மீண்டும் எதிர்பார்ப்பு இல்லாத ஒரு பரிவு. தேங்க்ஸ் கமல்... தேவைன்னா கண்டிப்பா கூப்பிட்றேன் -ன்னு சொல்லிட்டு முடிச்சிக்கிறேன்

சாயங்காலம் கமலிடம் இருந்து மறுபடியும் போன். ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தீங்களா? டாக்டர் என்ன சொன்னார்? எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க சுரேஷ்.... இங்க தனியா இருக்கீங்க...இந்த ஊர்க்காரனுங்க ஓவர் கன்ஃபூஸ் பண்ணுவானுங்க. இப்படியே நட்பின் அடர்த்தி அதிகம் ஆகிறது.

இரண்டு வாரத்துக்கு முன்ன வரைக்கும் யாருன்னே தெரியாத கமல் இப்போது ஓரளவிற்கு தினமும் நினைக்கக்கூடிய உறவாக மாறுகிறார்.

அடுத்த நிலை

உடல்நிலை சரியாகி மீண்டும் அலுவலகம் செல்கிறேன் நான். கமலோடு நீண்ட உரையாடல். அப்படியே அவரோடு காஃபி. மனதுக்கு நிறைவான உறவாக கமல் மாறுகிறார். இந்த விசாரிப்புகளுக்கு முன் கமலின் வட்டம் வேறு. எனது வட்டம் வேறு. இப்போது கமல் என் நெருங்கிய வட்டத்திற்குள் வந்து விட்டதாய் ஒரு நினைப்பு.

அடுத்த நாள் அலுவலகத்தில்...
கமல் காஃபி வர்றீங்களா?
இல்லை சுரேஷ்...இப்போ தான் சாப்டேன். நீங்க போய்ட்டு வாங்க ன்னு ஒரு புன் முறுவல்.

மதியம் சாப்பிடப்போகும் முன், கமலுக்கு ஒரு போன்.

லஞ்ச் போகலாமா கமல்... ?
நானும் கிளம்பிகிட்டே இருக்கேன். கேண்டீன்ல மீட் பண்ணுவோம் ன்னு பதில்

சாய்ங்காலம் வீட்டுக்கு போறதுக்கு முன்ன கமலுக்கு ஒரு போன்.

வீட்டுக்கு கிளம்புவோமா?
நான் வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆச்சிங்க சுரேஷ்.

வீட்டுக்கு போறதுக்கு முன்ன ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாமே ன்னு ஒரு எனக்குள் ஒரு யோசனை
(இது தான் எதிர்பார்ப்பின் தொடக்கம்)

சில நாட்களில் கமலுக்கு என்னோடு காஃபிக்கோ, லஞ்ச்க்கோ வர விருப்பமில்லை. அவருக்கென்று ஒரு கேங்க். அவங்களோட இருக்கத்தான் அவருக்கு ஆசை என்று தெளிவாக தெரிந்து விடுகிறது. இதில் தவறேதும் இல்லையே. எனது எதிர்பார்ப்பு நிறைவேறாத போது எனக்கு ஒரு விரக்தி. இருந்தாலும் கமலை வெறுக்க முடியவில்லை. யாருமே விசாரிக்காத போது என்னை விசாரிச்சாரே ... பரிவா பேசினாரே... மனசு அடிக்கடி நினைக்கிது.

கமலிடம் ஒட்ட முடியாவிட்டாலும் வெறுக்க முடியல. இப்படி ஒரு நிலையில் எத்தனை நாட்களுக்கு இந்த உறவு நீடிக்கும்? இதைத்தான் எதிர்பார்ப்பு என்கிறேன் நான்.

இசைதான் வாழ்வு... இசை தான் உயிர்...இசை தான் உலகம் என்று இசைக்கு முழுவதுமாக தன்னை அர்பணித்தாலும், கலைஞனின் இசை ரசிகனை சென்றடைய வேண்டும். ரசிகன் அதனை வரவேற்க வேண்டும்.

வரவேற்பில்லாத கலைஞனின் இசையும் எதிர்பார்ப்பில்லாத அன்பும் ஒன்று தான்

எதிர்பார்ப்புகளால் மட்டுமே அன்பு வலுப்பெறும். உங்களின் எதிர்பார்ப்பு நிராகரிக்கப்படும் போது, உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பவரை அடையாளம் காணுங்கள்.

அன்பு ஆழமாகும்
வாழ்க்கை வசப்படும்

குழந்தை


இவரு பேரு சாய்டு. நீங்க என்ன பேசினாலும் இவருக்கு கவலையில்லை. இவர் பேச நினைக்கிறத பேசிகிட்டே இருப்பார். உங்களுக்கு புரியுதா இல்லையா அப்படிங்கிறதெல்லாம் இவருக்கு முக்கியம் இல்லை. அது இவரோட பிரச்சனையும் இல்லை. எந்த சூழ்நிலையில் நான் இவர்கிட்ட பேசினாலும் எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். மனசுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். இவர் பேசறது உங்களுக்கு புரியலைன்னா மறுபடியும் சொல்லுவாரு. அப்பவும் உங்களுக்கு புரியலைன்னா அடுத்த டாபிக்கு போய்டுவார்.

இவர் என்ன சாப்ட்றாரோ... அதையே தான் நீங்களும் சாப்பிடனும். இவர் bye சொல்றதுக்கு முன்னாடி நீங்க சொல்லக்கூடாது.

இவருக்கு முன்னாடி யாரும் சத்தமா பேசக்கூடாது. ஓடி வந்து சண்டைப் போடாதீங்க ன்னு சொல்லுவாரு.

பெரியப்பா -ன்னு சொல்ல இவருக்கு கஷ்டமா இருக்கறதால ரொம்ப யோசிக்காம uncle ன்னு சொல்லிடுவார்.

சாய் USA, ப்ரியா UK, சதா சிங்கப்பூர் ன்னு தெளிவா சொல்லுவார். ஷாப்பிங் போனா இவர் கையில ஒரு கூடை கொடுத்துடனும். இவருக்கு தேவையானதை எடுத்து இவரே போட்டுக்குவார். ஸ்டோலர் ல எல்லாம் உட்கார மாட்டார். ஏன்னா இவரு வளர்ந்துட்டாராம்.

தாத்தா தபோலி - அப்படின்னா தாத்தா கீழ விழுந்துட்டார்ன்னு அர்த்தம்
Guggu - அப்படின்னா not feeling well ன்னு அர்த்தம்

யார் போன் பண்ணாலும் உடனே USA வாங்கன்னு சொல்றது இவரோட வழக்கம். இவரோட குறும்பு பத்தி சொன்னா தனியா ஒரு blog தான் போடனும்.

பாட்டு நிறைய பாடுவார். "அக்கம் பக்கம் யாரும் இல்லா" கீரிடம் பாட்டு நல்லா பாடுவார். சரின்னு இவருக்கு போன் பண்ணும் போது, youtube ல அந்த பாட்டை கஷ்டப்பட்டு கண்டு புடிச்சி அந்த பாட்டை போட்டு விட்டா எந்த reaction ம் இல்லை. இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம் ன்னு இவங்க அம்மா கிட்ட கேட்டா, இவரோட fav மாறிப்போச்சாம். "முகுந்தா முகுந்தா" தான் விடாம கேக்குறாராம்.

சரின்னு அடுத்த தடவை அந்த பாட்டைப்போட்டா...தலைவர் ஒரே அழுகை... ஏன்னா இவர் தான் பாட்டு போடுவாராம். நாங்க போடக்கூடாதாம். வேற வழி... கேட்டுத்தானே ஆகணும்....

Saturday, 23 May 2009

முன்னோட்டம்

இன்னைக்கு எதையோ யோசிச்சிகிட்டு இருக்கும் போது , இப்படி எனக்கு தோன்ற யோசனையை எல்லாம் கோப்பாக வைத்தால் என்னன்னு தோனுச்சி. உடனே create பண்ணிட்டேன். இப்படி நிறைய ஆரம்பிச்சி இருக்கேன்... பாதியிலேயே நின்னு போனது நிறைய. முழுவதும் முடிந்ததும் அழித்தது சில.... இதுவாவது நிலைக்குதான்னு பார்ப்போம்.

எனக்கு எழுதத்தெரியும் ன்னு உங்ககிட்ட சொல்லி பெருசா எனக்கு எதுவும் கிடைக்கப்போறதில்லை. யாருன்னே தெரியாதவங்ககிட்ட எல்லாம் எனக்கு அங்கீகாரம் கிடைக்க எடுக்கும் முயற்சியும் இது இல்லை.

இப்படி ஒரு Blog இருக்குன்னு எத்தனை பேருக்கு தெரியப்போகுது..?? அதைப்பத்தி எனக்கென்ன கவலை. என்னை கவர்ந்த, யோசிக்க வைத்த, பாதித்த, பிடித்த அனைத்தும் இங்கே.....

சரி.. தலைப்புக்கு வருவோம். அது என்ன எல்லாமே நான்? நான் என்பது அகந்தையின் அடையாளம் அல்லவா? ஒவ்வொரு மனிதனும் முதலில் மறக்க வேண்டியது நான்.

எப்போதோ யாரோ சொன்னதாக நினைவு. "I want Peace" ன்னு ஒரு ஞானிகிட்ட ஒருத்தன் கேட்டானாம்... "What is I ? Ego, What is Want? Desire. root out the ego and desire, what remains is Peace" ன்னு ஞானி சொன்னாராம்.

இங்கே நான் நினைக்கும் "நான்" - அகந்தையில்லை. கர்வமில்லை. என்னைப்பொறுத்த வரையில்....

நான் என்பது உரிமை
நான் என்பது நிஜம்
நான் என்பது சத்தியம்
நான் என்பது உண்மை
நான் என்பது நிர்வாணம்


எனக்கு தெரிந்த நான் நல்லவனா, கெட்டவனா,சரியான பாதையில் செல்கிறவனா இல்லையா போன்றவற்றிற்கு முடிவு தெரியாமல் போனாலும், எனக்கு தெரிந்த நான் நிஜமானவன்.

இவன் நல்லவன்...எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான். அவனால முடிஞ்ச உதவி செய்வான் இப்படி ஒவ்வொருத்தரும் உங்களைப்பத்தி ஏதாவது நினைப்பாங்க. அதில் எந்த அளவிற்கு உண்மையிருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆகவே இந்த நான் மிகவும் முக்கியமானவன். தேவையானவன். அத்தியாவசியமானவன். இந்த அடையாளம் வேண்டும்.

இன்று என் கையில் எது இருக்கிறதோ அது என்னுடையது.
நேற்று நான் இழந்ததும், நாளை நான் சேர்க்கப்போவதும் என்னுடையது
இறுதியில் இங்கே விட்டு செல்வதும் என்னுடையது.

மேற்சொன்னவையாவும் உங்களுக்கு சிறுபிள்ளைத்தனமாகவோ,பொய்யானதாகவும் இருக்கலாம். அது உங்களுக்குள் இருக்கும் நீங்கள் [:)]